தமிழ்நாடு

"போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தீர்த்து வைக்கைப்படும்" போக்குவரத்து துறை அமைச்சர்  உறுதி!

Malaimurasu Seithigal TV

போக்குவரத்து தொழிலாளரின் ஒற்றை கோரிக்கை பேசி தீர்க்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 30 பணிமனைகளில் பத்து பணிமனைகளில் தனியார் மூலம் ஓட்டுநர்கள் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் நேற்று திடீரென மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையொட்டி சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்து பயணிகள் எங்கும் செல்லமுடியாமல் பரிதவித்தனர்.  பின்னர் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை ஒட்டி போராட்டம் கைவிடப்பட்டது. 

பின்னர் நேற்று மாலை அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து தொழிலாளரின் ஒற்றை கோரிக்கை பேசி தீர்க்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், "முதல்வர் ஜப்பானில் இருந்தாலும் உடனடியாக  என்னை அழைத்து போராட்டத்தை நிறுத்த அறிவுறுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தொடர்பு கொண்டு தகவல் சொன்ன காரணத்தினால் தொழிற்சங்க தலைவருடன் பேசினேன். அவர்கள் வைக்கக் கூடிய கோரிக்கைகள் குறித்து நேரடியாக பேசி முடிவெடுக்கலாம் என கூறியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் அடிப்படையில் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு உடனடியாக பேருந்துகளை இயக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டதாகவும் தற்போது அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.