தமிழ்நாடு

சனாதனம் சர்ச்சை: உ.பி சாமியார் - உதயநிதி மீது புகார்...!

Tamil Selvi Selvakumar

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மற்றும் அமைச்சர் மீதும்,  சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த உதயநிதி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, கொரோனாவை போல் ஒழித்து காட்ட வேண்டும் என பேசியிருந்தார். இதற்கு உத்திரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டோவை கிழித்து, அவரது தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவரும், வீரத்தமிழர்  பேரவை என்ற அமைப்பின் சார்பாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவித்த சாமியார் மீதும், உதயநிதி தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் மகாராஸ்டிரா மாநிலத்தில்  அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனாதா கட்சியின் ஆண்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் மத துவேசத்தை தூண்டும் விதமாக சனாதனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இதற்கிடையில், நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.