தமிழ்நாடு

வருகிறது மாண்டஸ் புயல்...  முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சென்னை விமான நிலையம்

Malaimurasu Seithigal TV

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக அவசர கால ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்க விமான நிலைய ஆணையம் உத்தரவு பலத்த காற்றால் பாதிக்காமல் இருக்க சிறிய ரக விமானங்களை பாதுகாக்க நடவடிக்கை

சென்னை விமான நிலைய ஆணையகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:

தென்கிழக்கு அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை  விமான நிலையத்தில் செய்யப்பட வேண்டிய தயார் நிலை குறித்து ஆலோசிக்க விமான நிலைய ஆணையக அதிகாரிகள், தீயணைப்பு, விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்கினார். இதில் இந்திய வானிலை மைய விமான நிலைய அதிகாரி வி.ஆர். துரை,  விமான நிலைய செயல்பாடுகள் பிரிவு பொது மேலாளர் எஸ்.எஸ்.ராஜு உள்பட, விமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு சூறாவளி புயல் தாக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை மற்றும் வட உள் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் டிசம்பர் 9ம் தேதி ராயலசீமாவை ஒட்டி கரை கடக்க வாய்ப்பு உள்ளது. 

இதனால் விமான நிலையத்தில் உள்ள அவசர கால அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டது. சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல்,  கடுமையான காற்று அல்லது சீரற்ற கால நிலையில் அவை நகராதவாறு தரை கையாளும் கருவிகளைப் பாதுகாப்பதற்கும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பப்ட்டது.  

பலத்த காற்று காரணமாக செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்கு தங்கள் விமானங்களை வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவு செய்யப்பட்டன.

அவசர காலத்தின் போது விமான நிலைய உணவு கூடங்களில் பொதுமான அளவு பொருட்களை அடுக்கி வைப்பதை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.