தமிழ்நாட்டில் கோடை மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மழை மற்றும் சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்துள்ளது.
இதையும் படிக்க : ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம் திரும்பப்பெறப்பட்டது...5 ஆண்டுகள் கூடுதலாக இயங்க அனுமதி!
இந்நிலையில் கோடை மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுக்கு உட்பட்ட கீழக்கரை, ஒதடிகுப்பம், கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல ஏக்கரில் பயிரிடப்படிருந்த பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே வருவாய்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்குமாறு தமிழ்நாடு அரசை இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.