தமிழ்நாடு

ஏப்ரல் 23 உலக புத்தக தினம் சிபிஐ(எம்) வாழ்த்து

Malaimurasu Seithigal TV

மனித சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கும் மொழியையும், கல்வியையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்லும் தன்னிகரற்ற ஊடகமாக புத்தகங்கள் அமைந்துள்ளன.
புத்தகங்களை காலத்தின் விதை நெல் என்று அழைத்தார் பாவேந்தர் பாரதிதாசன். புரட்சிப் பாதையில் நிகரற்ற ஆயுதங்களாக புத்தகங்களை கண்டார் மாமேதை லெனின். தூக்குமேடை ஏறும் தறுவாயில் புத்தக வாசிப்பில் இருந்தார் மாவீரன் பகத்சிங். ஒரு மனிதனுக்கு ஓராயிரம் வாழ்க்கையை வாழ்வதற்கான, வாய்ப்பினை இலக்கியங்களும், கவிதைகளும் உருவாக்குகின்றன. புத்தக வாசிப்பு நமக்குள்ளாக ஒரு புதிய உலகை திறப்பதோடு, நிதானமாகவும் உண்மையை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளவும் வழி வகுக்கிறது.


உலக புத்தக தினம் என்பது கொண்டாட்டங்களோடு முடிந்து விடக் கூடிய ஒன்றல்ல. புதிய உலகின் கதவுகளை திறக்கும் அறிவுச்சாவிகளே புத்தகங்கள் என்பதை உணர்ந்து வாசிப்பை பரவலாக்குவோம். புத்தகங்களை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உலக புத்தக தின வாழ்த்துக்களை உரிதாக்குகிறோம் என வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.