தமிழ்நாடு

விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை!

Malaimurasu Seithigal TV

நிலவின் தென் துருவத்தில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வுப்பணியை தொடங்கியது.

ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

தொடர்ந்து நிலவில் நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் தூக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து லேண்டரும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, தூக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வைக்கும் முயற்சி நடைபெற்றது. ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.