திமுக பொருளாளர் டி ஆர் பாலு நீதிமன்றத்தில் அளித்த சத்தியபிரமானத்தில் பல பொய்கள் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி DMK files என்ற பெயரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன், டி ஆர் பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் மற்றும் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாகக் கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணைக்காக நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களச் சந்தித்த அண்ணாமலை, திமுக பொருளாளர் டி ஆர் பாலு நீதிமன்றத்தில் அளித்த சத்தியபிரமானத்தில் பல பொய்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், தனக்கு எதிராக டி ஆர் பாலு அளித்த வாக்குமூலத்தில், 3 நிறுவனத்தில் மட்டுமே தான் பங்குதாரராக இருப்பதாக பொய்யுரைத்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திமுக உழல் பட்டியலின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாகவும், பாதயாத்திரைக்கு முன்பாக வெளியிடவுள்ளதாகவும், அதன்பின்னர் 3 ஆவது மற்றும் நான்காவது பாகங்களும் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.