தமிழ்நாடு

"சுரங்கப்பாதைகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை" மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!!

Malaimurasu Seithigal TV

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையினால் சுரங்கப்பாதைகளில் பெரிய அளவில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய பெய்து வரக்கூடிய கன மழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து  கண்காணித்து வருகிறார்கள். 

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் பெரிய அளவில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. கத்திப்பாராவிற்கு கீழே உள்ள சுரங்கப்பாதையில் அதிகாலையில் லேசான மழை நீர் தேங்கி இருந்தது. அதையும் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கன மழை காரணமாக பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து  கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.