தமிழ்நாடு

தொடர் மழையால் குளிர்ந்த தமிழ்நாடு...வெப்பம் தணிந்தும் மக்கள் அவதி...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெரம்பூர், பெருங்குடி, துரைப்பாக்கம், திருவான்மியூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த கனமழை பெய்தது. குறிப்பாக செம்மஞ்சேரி, ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதேப்போல் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழழம்பி, பாலு செட்டி சத்திரம், தாமல், செவிலிமேடு, ஐயங்கார் குளம், ஓரிக்கை, களக்காட்டூர், பரந்தூர், வாலாஜாபாத், உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 8 சென்டி மீட்டர் மழையும், பூந்தமல்லியில் 7 சென்டி மீட்டரும், ஆவடியில் 3 சென்டி மீட்டரும், செங்குன்றம், சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தூசி, மாமண்டூர், வெம்பாக்கம், மாங்கால் கூட்டு சாலை,  அனக்காவூர், பாப்பந்தங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. 

அதேப்போன்று செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்கள் சற்று அவதியடைந்துள்ளனர்.