தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் ஊழல் புகார்..! விசாரணைக்கு ஆஜரான பாஜக ஐடி பிரிவு தலைவர்..!

Malaimurasu Seithigal TV


தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களில் ஊழல் நடப்பதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் கொடுத்த புகாரில் அது குறித்த விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜரானார். 

சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கடந்த 29ம் தேதியன்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களில் ஊழல் நடப்பதாகவும், திமுக தலைமையிலான அரசு பொறுபேற்றது முதல் தமிழகத்தில் மது விற்பனை பள்ளி குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரிடமும் சகஜமாக புழங்க துவங்கியுள்ளது. இதில் பல முறைகேடுகள் நடப்பது தெரியவந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி.யில் இருந்து 10% வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 130 கோடி வரை தமிழகத்தில் விற்பனையாகும் நிலையில் 10% கூடுதல் விலை என்பது 13 கோடி வரை கணக்கில் வராத கருப்பு பணமாக பெறப்படுகிறது. 

சட்டப்படி பார்களில் மதுவிற்பனை செய்யக்கூடாது. ஆனால் தமிழகத்தில் உள்ள 3000க்கும் அதிகமான பார்களில் மது விற்பனையானது, 24 மணி நேரமும் 60% எம்.ஆர்.பி விலைக்கு கூடுதலாக விற்கப்படுகிறது. பார்களில் சட்டவிரோத மது விற்பனையில் 3000 பார்களில் சுமார் 30 கோடிக்கு மேல் தினமும் கணக்கில் வராத கருப்பு பணமாக திரட்டப்படுவதாகவும் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக விசாரணைக்கு, இன்று லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி அது குறித்து விசாரணை அதிகாரியிடம் விளக்கம் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விசாரணை முழு திருப்தி அளிப்பதாகவும், இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தில் முறையிட போவதாகவும் கூறினார். டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 130 கோடி ரூபாய் வருவாயில் 10% எம்.ஆர்.பியை விட அதிகம் சம்பாதிக்கின்றனர். அதே போல் மதுபான பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து பல கோடி வருவாய் ஈட்டுகின்றனர். இந்த வருமானம் முழுவதையும் கரூர் கம்பெனி ஒன்று 1000 ஏஜெண்டுகளை வைத்து வசூல் செய்கின்றனர். இந்த ஊழல் முறைகேடுகள் அமைச்சருக்கு தெரியாமல் எப்படி நடக்கும் எனவும் கேள்வி எழுப்பினார். கரூர் கம்பெனி என்ற பெயரில் சிண்டிகேட் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியாமல் நடக்காது. அமைச்சரின் இல்லத்தில் அவரது தம்பி அசோக் என்ன செய்கிறார். சமையல் செய்யவா இருக்கிறார். அமைச்சரின் தம்பி அசோக்கை பார்க்காமல் பணியிட மாற்றம், உள்ளிட்ட எதுவும் நடப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.