தமிழ்நாடு

இன்று முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர், காவல்துறையினர் மாநாடு...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு இன்று தொடங்குகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில், மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதுமட்டுல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் துறை ரீதியாக அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.

சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிக்கபட்ட திட்டங்கள், நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை, மானிய கோரிக்கையின் போது அறிவிக்கபட்ட திட்டங்கள் ஆகியவற்றின் நிலை மற்றும் அவற்றை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

அதே போல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் செயல்பாடுகள், உலக முதலீட்டாளர் மாநாடு, பண்டிகை கால பாதுகாப்பு, முதலமைச்சர் காலை உணவு திட்டம், நாடாளுமன்றத் தேர்தலின் போது சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.