தமிழ்நாடு

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு : ஆவணங்களை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Malaimurasu Seithigal TV

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யபட்டுள்ள முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இந்நிலையில், விசாரணையின் போது, தேசிய புலனாய்வு அமைப்பினரால் அசாருதீன் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி அசாருதீனின் தந்தை முகமது யூசுப் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தலை கீழாக தொங்க விட்டு அசாருதீனை அடித்ததாகவும், அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அசாருதீனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 

ஆவணங்கள் தாக்கல் செய்ய புழல் அதிகாரிகளுக்கு உத்தரவு :

இந்த வழக்கு  நீதிபதி எம்.சுந்தர், எம்.நிர்மல் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.மேலும், அசாருதீனின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில்  பதிலளிக்கும்படி, தேசிய புலனாய்வு முகமைக்கு உத்தரவிட்டு  விசாரணையை தள்ளிவைத்தனர்.