நாங்குநேரி சம்பவம் இளம் மாணவர்களிடம்கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதி ரீதியான விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க || நாங்குனேரி சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் ..!
இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்குநேரியில் அரங்கேறிய சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சகமனிதரை நமக்கு சமமான ஒருவராக அடையாளம் காணாமல், சாதி வேறுபாடும், மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க || நாங்குனேரியில் மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக செயலாளர் உறவினர் உட்பட 6 பேர் கைது..!