தமிழ்நாடு

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்... முதலமைச்சர் அவசர ஆலோசனை!!

Malaimurasu Seithigal TV

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். 

பொருளாதார மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு நிலை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதோடு, பீக் ஹவர்ஸ் கட்டணத்தையும் 15 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக, பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக, அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த ஆலோசனையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.