தமிழ்நாடு

"தன்னம்பிக்கை கொள்ளுங்கள்... மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்" முதலமைச்சர் அறிவுரை!!

Malaimurasu Seithigal TV

மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனையை கைவிட்டு தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென நீட் தேர்வால் உயிரிழந்த ஜெகதீஸ்வரனுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வை 3ம் முறை எழுதவிருந்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்த நிலையில், துக்கம் தாளாமல் தந்தை செல்வ சேகரும் உயிரிழந்துள்ளார். இருவரின் உயிரிழப்புக்கும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும் எப்போதும் எடுக்கக் கூடாது என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "லட்சக்கணக்கில் பணம் பெறும் நீட் பயிற்சி மையங்களால் பணம் வைத்திருப்பவர்களுக்கே மருத்துவக்கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது. இருமுறை நீட் தேர்வு தடை மசோதா அனுப்பப்பட்டும் எந்தக் கவலையுமின்றி, அதன்மீது ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் அவரின் இதயம் கரையப் போவதில்லை என குற்றம்சாட்டிய முதலமைச்சர், இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்பார்க்கப்படும் அரசியல்மாற்றம் விரைவில் நிகழும்போது நீட் தடுப்புச்சுவர் உதிர்ந்து விழும் எனவும் நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக ஜெகதீஷன் உயிரிழப்பே இருக்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மீண்டும் மீண்டும் மன்றாடி கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.