தமிழ்நாடு

பாரம்பரியமிக்க கார்கள், மோட்டார் சைக்கிள் வாகனக் கண்காட்சி...! சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட டிஜிபி..!

Malaimurasu Seithigal TV

சென்னையில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் பாரம்பரியமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, நாளை 11 மணி முதல் மாலை 4 மணி வரை என 2 நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய வாகன கண்காட்சியில் மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டரிங் கிளப்பின் உறுப்பினர்கள் தங்கள் பாரம்பரியமான பல்வேறு வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இன்று துவங்கிய இந்த கண்காட்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 80 பாரம்பரியமிக்க கார்கள் மற்றும் 25 மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் வாகனங்களை அவர் பார்வையிட்டார். குறிப்பாக டி.ஜி.பி - இன் கவனத்தை ஈர்த்த பென்ஸ் நிறுவனத்தின் படைப்பான, 1886 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பேடண்ட் மோட்டார்வேகன்" என்ற பழமையான வாகனம் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் படைப்பான, 1896 ஆம் ஆண்டு முதல் 1901 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த "குவாட்ரிசைக்கிள்" என்ற வாகனங்களின் மாதிரி வாகனங்களை நேரடியாக, தானே ஓட்டிப்பார்த்து அதன் செயல்திறன்களை ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூரில் உள்ள யு.எம்.எஸ் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட பென்ஸ் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் பழமையான வாகனங்களுடைய இந்த கண்கவரும் இரு மாதிரிகள், கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது கண்காட்சியின் சிறப்பம்சமாகவும் இவை பார்க்கப்படுகிறது. அதேபோல மோட்டார் சைக்கிள் வாகனங்களை பொறுத்தவரை 1944 ஆம் ஆண்டின் ஜேம்ஸ், 1946 ஆம் ஆண்டின் டிரம்ஃப் 350CC, 1954 ஆம் ஆண்டின் பி.எஸ்.ஏ பேண்டம், 1955 ஆம் ஆண்டின் டிரம்ஃப் டைகர் 100CC, 1956 ஆம் ஆண்டின் லேம்பிரெட்டா எல்.டி, 1967 ஆம் ஆண்டின் எம்.வி அகஸ்டா 150CC போன்ற பழமையான மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியைக் காண அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேரடியாக வந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களை கண்டும், அதன் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்பின் செயலாளரும், கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எம்.எஸ் குகன் கண்காட்சி குறித்து, பாரம்பரிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேகரித்து பாதுகாப்பதில் கொண்ட ஆர்வ மிகுதியால் கடந்த 40 ஆண்டுகளாக பழமையான வாகனங்களை சேகரித்து வருவதுடன், கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு கண்காட்சிகளையும் நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த கண்காட்சியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஜெமினி வாசன் ஆகியோர் பயன்படுத்திய கார்கள், பழைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வழக்கமாக ஒரு நாள் நடத்தப்படும் இந்த கண்காட்சி இந்த முறை பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு நாட்கள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.