தமிழ்நாடு

மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான கால வரம்பினை நீட்டிக்க வேண்டும் என மத்திய வேளாண்மை த்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

கடிதம் எழுதிய முதலமைச்சர்:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி, மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். 

காலவரம்பினை நீட்டிக்க கடிதம்:

அக்கடிதத்தில், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், செப்டம்பர் 15, 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய சிறப்புப் பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவினை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளினால் ஏற்பட்ட தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து  மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஏற்கனவே பயிர்க்காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15.11.2022 என்ற காலவரம்பினை 30.11.2022 வரை நீட்டிக்குமாறு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.