தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதம்... டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பிரதமரை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 18 ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய  அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதையடுத்து மேகதாது விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தியதோடு, அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழங்கினர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க இன்று மாலை பிரதமரை சந்திக்கவுள்ளார்.  இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் வருகிற 18-ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்போது மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது எனவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நேரில் வலியுறுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.