தமிழ்நாடு

ஜெயலலிதாவை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Malaimurasu Seithigal TV

பல்கலைக்கழகங்களில் முதலமைச்சர்களே வேந்தராக இருக்கும் வகையை ஏற்படுத்திய ஜெயலலிதா பாராட்டுக்குரியவர், என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 

டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக 2-வது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அத்துடன், திரைப்பட பின்னணிப் பாடகி பி. சுசீலா மற்றும் இசையியல் அறிஞர் பி.எம். சுந்தரம் ஆகியோருக்கு, மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தார். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பல்கலைக்கழகங்களில் முதலமைச்சர்களே வேந்தராக இருக்கும் வகையை ஏற்படுத்திய ஜெயலலிதா பாராட்டுக்குரியவர் என்றும், அவரை தான் மனதார பாராட்டுவதாகவும் புகழாரம் சூட்டினார். அத்துடன், முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக் கழகங்கள் சிறப்பாக வளர முடியும் என்றும் கூறினார். 

பாடகி பி.சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இல்லை என்று கூறிய முதலமைச்சர், சுசீலாவின் பாடலில் தனக்குப் பிடித்த பாடல், "நீ இல்லாத உலகத்திலே" என்ற பாடலின் வரிகளைப் பாடி அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், கல்விக்கு எந்த தடையும் இருக்க கூடாது என்றும், கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட  வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதலமைச்சர் பாடிய நிகழ்வு அதிசயமானது என்று கூறிய பின்னணி பாடகி சுசிலா, முதலமைச்சர் அவரது தந்தையை நினைத்து பாடியுள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.