தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் தொடங்கிய பணி...திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் பரபரப்பு...!

Tamil Selvi Selvakumar

தருமபுரி மாவட்டம் கடத்தூர் பிடிஓ அலுவலக திறப்பு விழாவின் போது, பேனர் வைப்பதில் அதிமுக 
மற்றும் திமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. 

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சியில் இருந்து, கடந்த அதிமுக ஆட்சியில் கடத்தூர் தனி ஒன்றியமாக பிரிக்கப்பட்டதை அடுத்து, புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில், அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து ஒருபுறம் அதிமுகவினரும், மறுபுறம் திமுகவினரும் பேனர் வைப்பதில் தீவிரம் காட்டினர். அப்போது இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மோதல் எழும் சூழல் ஏற்பட்டதை அடுத்து காவல் ஆய்வாளர் நாகலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் இருதரப்பினரிடையே சமாதான பேச்சு நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த களேபரம் அடங்குவதற்குள்,  காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.