தமிழ்நாடு

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்; பொறுப்புகளை வரையறுத்து அரசாணை! 

Malaimurasu Seithigal TV

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(சத்துணவு திட்டம்), வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு திட்டம்) ஆகியோருக்கான பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2023-24ஆம் நிதியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் ஆணை வெளியிடப்பட்டது. 

இந்த அரசாணையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (சத்துணவு திட்டம்) மட்டுமே கடமைகளும் பொறுப்புகளும் குறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ஆகியோருக்கு பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தினந்தோறும் கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஆகியோருக்கு ஏற்கனவே உள்ள பணிப் பொறுப்புகளுடன் சேர்ந்து கூடுதலாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்கும் பணிகளும் கொடுக்கப்படுகின்றன. 

அதன்படி தினம்தோறும் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்தல். உணவு வழங்கப்படும் நேரமாக காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், உணவு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைத்துக்கொள்ளுதலை கண்காணித்தல், தணிக்கை, பணியாளர்களுக்கு இடையே உரிய ஒருங்கிணைப்பை கண்காணித்தல், கண்காணிப்பு குழு கூட்டங்கள் என அனைத்தையும் கண்காணித்து முறையாக திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.