சிதம்பரம் கோயில் விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார்.
சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் தன்னிச்சையாக வைத்த அறிவிப்பு பலகையை இந்து சமய அறநிலைய துறையினர் அகற்ற முயன்றனர். அப்போது அவர்களை தடுத்த தீட்சிதர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் கனக சபையின் மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படலாம், அது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. இப்படியான சூழலில் இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருக்கக் கூடிய தீட்சிதர்களின் பணியாக இருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தீட்சிர்கள் தகராறு செய்து உள்ளனர். இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
பின்னர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 4000 ஏக்கருக்கு மேலாக இந்த சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு நிலங்களை மீட்டெடுத்து இருப்பதாக தெரிவித்த அவர், வேறு எதுவும் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டால் அதை மீட்டெடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது என தெரிவித்தார். மேலும் திருக்கோவில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாலும், இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற வார்த்தையின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் நிச்சயமாக அதை மீட்பதற்கு உண்டான நடவடிக்கையை துறை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:சென்னையில் வானவில் பேரணி!