தமிழ்நாடு

பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்கு பதிவு!!!

கபாலீஸ்வரர் கோவிலை பக்தர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என சட்டவிரோதமாக கோவிலில் போராட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர், வழக்கறிஞர் உட்பட 75 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை  அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி  விநாயகர் சதூர்த்தியன்று மாலை 6.15 மணியளவில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ரவி உட்பட 75க்கும் மேற்பட்டோர் கபாலீஸ்வரர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் கோவிலின் நான்காவது வாயிலின் கதவை மூடி திடீரென நவராத்திரி மண்டபத்தில்  அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அற நிலையத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும், கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் (own your Temple)  என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றுக்கூடி உறுதி மொழி ஏற்கும் கூட்டம் நடத்தினர்.  நீண்ட நேரமாக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் வெளியே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து கோவில் அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்திய போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக கோவிலுக்குள் கூட்டம் நடத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் காவேரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த நிலையில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி உட்பட 75 பேர் மீது  சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி கூடுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மயிலாப்பூர் போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே போல மற்ற கோவில்களிலும் ஒன்று கூட வாய்ப்புள்ளதால் அனைத்து கோவில்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த சென்னை காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.