தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அதிரடி மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகியுள்ளதால், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்ட  சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக செந்தில் பாலாஜி வகிக்கும் துறைகளில் தளர்வு ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக அமைச்சரவையில் மாற்றம் நிகழலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை இரண்டும், கூடுதல் பொறுப்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி,  மின்சாரத் துறை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. 

மேலும், இது தொடர்பான பரிந்துரை கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் வகித்த பதவி பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதகாவும், அதே நேரத்தில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.