தமிழ்நாடு

மேலடுக்கு சுழற்சி காரணமாக...ஜூன் 26 வரை மழைக்கு வாய்ப்பு!

Tamil Selvi Selvakumar

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். 

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 26-ம் தேதி வரை வட மற்றும் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிண்டி, சைதாப்பேட்டை, வள்ளுவர்கோட்டம்,  திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. 

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தமங்கலம், வடகாடு, கல்லாலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், தொடா்ந்து 3-வது நாளாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் சாலையில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கிருஷ்ணகிாி மாவட்டம் பர்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நீண்ட நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையே அப்பகுதிகளில் கடலை விதை, விதைக்க தகுந்த பருவத்தில் மழை பெய்திருப்பதால்  விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.