தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில அதிகாரத்தை மீறும் செயல் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் எதிர் மனுதாரராக திமுக, தி.க. வி.சி.க, மதிமுக, இடதுசாரி கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்டன.
இந்நிலையில், இதற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தேவையற்றது என்றும், ஒரே நாடு, ஒரே தகுதி என்ற கொள்கை அடிப்படையிலேயே நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏ.கே.ராஜன் குழுவை அமைத்த தமிழக அரசின் செயல், மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு குழு அமைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.