தமிழ்நாடு

”3 வேளாண் திட்டங்கள் மூலம் உழவர்களை கொடுமைப்படுத்தியது மத்திய அரசு” - முதலமைச்சர் குற்றச்சாட்டு!

Tamil Selvi Selvakumar

திமுக அரசு எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தம்பாக்கத்தில் 2 நாள் நடைபெறும் வேளாண் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேளாண் பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில் வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். திமுக அரசு கொண்டு வந்த முதலமைச்சரின் மானாவரி நில மேம்பாட்டு திட்டம், நீர்பாசன நவீன திட்டம், மண்வள மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு கூறினார்.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால் தமிழகத்தில் பாசன பரப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், 120 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் காரணமாக வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இதற்கு மகுடம் சூடும் வகையில் தற்போது வேளாண் வணிகத் திருவிழா நடைபெறுவதாகவும் கூறினார்.

கலைஞர் ஆட்சியில் உழவர் சந்தை தொடங்கப்பட்டதாக சுட்டிக் காட்டிய முதலமைச்சர், 140 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிதி வழங்கி உள்ளதாக தெரிவித்தார். 2006-ஆம் ஆண்டு ஒரே கையெழுத்தின் மூலம்  7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை கலைஞர் தள்ளுபடி செய்ததை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இலவச மின் இணைப்புகளை வழங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளதாக கூறினார். 

அதேநேரத்தில், 3 வேளாண் திட்டங்களை கொண்டு வந்து தலைநகர் டெல்லியில், மழை - வெயிலில் உழவர்களை கொடுமைப்படுத்திய பாஜக அரசு, தொடர்ந்து உழவர் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.