தமிழ்நாடு

காவிரி நீர்: வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்தல்...!

Malaimurasu Seithigal TV

காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.

காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற தமிழ்நாடு அரசு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், வருகிற 16-ம் தேதி காலை 8 மணி முதல் 31-ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என முடிவு செய்து அதனை கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைத்தனர். 

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு சாா்பில், வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்தப்படவுள்ளது.