தமிழ்நாடு

"அர்ச்சகர் ஆவதில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை" உயர்நீதி மன்றம் அதிரடி!

Malaimurasu Seithigal TV

கோவில் அர்ச்சகர் பணி நியமன விவகாரத்தில் ஜாதி அடிப்படையிலான பரம்பரைக்கு எந்த பங்கும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சேலம், சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சர்கள் பணி தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யக் கோரி கோவில் அர்ச்சகர் முத்து சுப்பிரமணியன் என்பவர் 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கோவிலில் பின்பற்றப்படும் ஆகமத்தின் அடிபடையிலேயே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கோவில்களின் ஆகமத்தை காண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இக்குழு அறிக்கை அளிக்கும் வரை அர்ச்சகர்கள் நியமத்தை தள்ளி வைக்க வேண்டுமா? என்ற கேள்வி குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகமத்தை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள குழு, தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன், குறிப்பிட்ட கோவிலின் ஆகமம் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்றால் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்களும், தக்கார்களும், அர்ச்சகர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அர்ச்சகர் நியமனத்தில்  ஜாதியின் அடிப்படையிலான பரம்பரைக்கு எந்த பங்கும் இல்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் ஆகமம் தெளிவாக்கப்பட்டுள்ளதால், அர்ச்சகர் நியமன நடைமுறையை மேற்கொள்ளலாம் எனவும், தேர்வு நடைமுறையில் மனுதாரரும் பங்கேற்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.