மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை வைத்து ஆர்.கே.நகர் தேர்தலில் பிரச்சாரம் செய்ததாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக - புரட்சி தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரப்புரை மேற்கொண்டபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் போல் பொம்மையை தேசியக்கொடி போர்த்தியபடி வைத்து பிரச்சாரம் செய்தனர்.
இதுதொடர்பாக மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகவில்லை என்றும், ஆதாரம் இல்லை என்றும், சட்ட விதிகளை பின்பற்றி வழக்குப்பதிவு செய்யவில்லை என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக மட்டுமே ஊர்வலம் நடத்தப்பட்டது, எந்த வகையிலும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய கொடியை அவமதித்ததாக கருத முடியாது எனவும், விதிகளை முறையாக பின்பற்றாமல் போலீசார் நேரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி, மூவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க:ஓபிஆர் மீது பெண் புகார்; "பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" ஜெயக்குமார் வலியுறுத்தல்!