தமிழ்நாடு

ஆசை வார்த்தைக் கூறி ஐ.டி ஊழியருக்கு அல்வா கொடுத்த இளம்பெண்!!விஷயம் சைபர் கிரைம் வரைக்கும் போயிடுச்சு...

போலியான செயலிகள் மூலம் கிரிப்டோகரன்சி மோசடிகள் நடந்து வருவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சென்னையில் பணியாற்றும் ஐ.டி ஊழியர் ஒருவர், ஒரு டேட்டிங்செயலியில் தனது சுய விவரக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்துள்ளார். இதையடுத்து அவரிடம் பெண் ஒருவர், சீனாவிலிருந்து பேசுவதாகக் கூறி அறிமுகமாகியுள்ளார். 

இப்படியே, முதலில் நண்பராக பேசத் தொடங்கி பின்னர் அவரைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய  ஐ.டி ஊழியரிடம், அந்த  பெண் தான் சொல்லும் இணையதளத்தில் இந்திய பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் கோடீஸ்வரராக மாறிவிடலாம் எனவும், அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பி, சீன பெண் கூறிய டிரேடிங் செயலி மூலமாக பணத்தை முதலீடு செய்துள்ளார்.

முதலில் 10 ஆயிரம், 20 ஆயிரம் என குறைந்த பணத்தை  பிட்காயின்களாக மாற்றி முதலீடு செய்தபோது லாபம் கிடைத்துள்ளது. குறைந்த பணத்தில் அதிக லாபம் கிடைத்ததால் பேராசை கொண்ட ஐ.டி ஊழியர் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.4.5 லட்சத்தை மொத்தமாக டிரேடிங் செயலி மூலம் முதலீடு செய்துள்ளார்.

ஆனால், சில நிமிடங்களில் அந்த பணம் மாயமாகியதையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் அந்த இளம்பெண் பேசுவதையும் தவிர்த்துள்ளார். ஒருகட்டத்தில், தன்னை மலேசியன் போலீஸ் கைது செய்து விட்டதாகவும் உன்னைப் போலவே நானும் மற்றொரு நபரை நம்பி ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐ.டி ஊழியர், பண முதலீடு செய்த இணையதளம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, அந்த செயலி  அனைத்தும் போலியானது என தெரியவந்த ஐ.டி ஊழியர் மிகவும் அதிர்ச்சியடைந்தார் . உடனே அவர், இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

எனவே, கிரிப்டோகரன்சி செயலியில் முதலீடு செய்பவர்கள், அந்தசெயலி நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.