தமிழ்நாடு

'முடிந்தால் பிடித்துப்பார்' வீரர்களை சிதறவிட்ட காளைகள்...விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். 

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். சேலம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 300 பேர் களமிறங்கிய இந்தபோட்டியை ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். முதலில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வீரர்கள், பின்னர் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் எதிர்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த நடுவப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நடுவப்பட்டி, கோபாலன்பட்டி உள்ளிட்ட 36 கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளையர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கலியுக மெய் அய்யனார் கோயில் புறவி எடுப்பு விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் கண்டு களித்தனர்.  இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கின. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கி பரிசுகளை அள்ளினர்.