தமிழ்நாடு

"போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது" ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தகவல்!

Malaimurasu Seithigal TV

கோவை ரயில் நிலைய சந்திப்பில் இட நெருக்கடி மற்றும் நெரிசலை தவிர்க்கும் விதமாக போத்தனூர் ரயில்  நிலையத்தில் வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்படுவதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார். 

பாலக்காடு மற்றும் சேலம் ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் எம் சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தனி ரயில் மூலம் பாலக்காட்டில் இருந்து போத்தனூர் ரயில் நிலைய சந்திப்புக்கு வந்த அவர், அங்கு மேற்கொள்ளப்படும் ரயில்வே மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஏற்கனவே இருக்கக்கூடிய நடைமேடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக அம்ரித் திட்டத்தில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை ரயில் நிலைய சந்திப்பில் மேம்பாட்டிற்காக நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதிக எண்ணிக்கையில் ரயில்கள் கோவை ரயில் நிலைய சந்திப்பிற்கு வருவதால், மக்கள் நெரிசல் ஏற்படுவதாகவும் போதிய அளவு ரயில் நிறுத்தும் இடம் இல்லாமல் இருப்பதாக கூறிய அவர், இதற்கு மாற்றாக போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், போத்தனூர் பாலக்காடு இடையே வனப்பகுதியில் கடந்து செல்லும் ரயில் தண்டவாளத்தில், யானைகள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரயில் தண்டவாளத்தில் யானைகள் கடக்கும் இடத்தை ஆய்வு செய்து, அந்த இடத்தில் ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக ஆபத்து இல்லாமல் யானைகள் கடந்து செல்வதாக தெரிவித்தார்.

போத்தனூரில் இருந்து மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு  ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 8 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் அவற்றை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் அமைப்பினர் ஆர் என் சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதேபோல கேரளாவில் இருந்து போத்தனூர் கடந்து செல்லும் ரயில்களை நிறுத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலிப்பதாக தென் மண்டல தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் உறுதியளித்தார். பின்னர் அவர் வந்த தனி ரயில் மூலம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார்.