தமிழ்நாடு

விஜய்க்கு பாஜக கொடுக்கும் மறைமுக அழுத்தங்கள்... சீமான் பகிரங்க குற்றச்சாட்டு...

விஜய் தனது திரைப்படங்களில் பாஜக அரசை தாக்கும் வகையில் நடித்ததற்காகவே அவருக்கு மறைமுகமாக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

நடிகர் விஜய் தான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய் காருக்கு வரிவிலக்கு  வேண்டும் என்று கோரி உயர்நீதிடன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயை கண்டித்ததோடு மட்டுமல்லாமல்  ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து அந்த மனுவை தள்ளுபடியும் செய்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“தமிழ்த்திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய் அவர்கள், 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய மகிழுந்திற்குச் செலுத்தவேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்டத்தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரிவிலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல. ஆனால், அத்தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப் போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரிக் கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது. தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்தாண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. 

சோதனைகளின்போது விஜய் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட முடியவில்லை என்றபோதிலும், பாஜகவின் ஆட்சி முறையைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடேயாகும் என்று மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.