தமிழ்நாடு

''நடிகராக இருப்பதால், அரசியலுக்கு வர முழு தகுதியும் வந்து விடாது'' கவிப்பேரரசு வைரமுத்து கருத்து!

Malaimurasu Seithigal TV

நடிகராக இருப்பதால் மட்டுமே அரசியலுக்கு வர முழுத் தகுதியும் வந்து விடாது. சமூக அக்கறையும், ஆற்றலும், லட்சியமும் வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்தில் அவரது திரு உருவ சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக கருணாநிதியின் தாய், தந்தையர் மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கலைஞர் பிறந்த இல்லத்தில் மரக்கன்றையும் நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து இல்லத்தில் உள்ள வருகை பதிவேட்டில்  "கலைஞர் இருந்த காலத்தை விட இறந்த பிறகு தான், நீளமாக நினைக்கப்படுகிறார். தமிழ் மொழியும் இனமும் உள்ளவரை அவர் தத்துவமாக வாழ்வார்" என எழுதி கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, "சினிமா நடிகரும் ஒரு மனிதன் தானே, ஒரு வாக்காளர் தானே, அவரும் இந்தியர் தானே, அரசியலுக்கு, சினிமா நடிகன் என்றோ, தனிமனிதன் என்றோ, கல்வியாளர் என்றோ வேறுபாடு கிடையாது" என்றும் "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியலை அவர்கள் தேர்வு செய்யலாம் உரிமை உண்டு" எனவும், அரசியல் அவர்களை தேர்வு செய்கிறதா என்பது தான் முக்கியம் என்றார்.

மேலும், விஜய் அரசியலுக்கு வருவது திமுகவிற்கு பாதகமாக இருக்குமா என்ற கேள்விக்கு, அதனை கணிப்பதற்கு காலங்கள் அதிகமாக இருப்பதாக நினைப்பதாகவும், இப்போதுதான் பூ பூத்திருக்கிறது, அது பிஞ்சாகுமா? காயாகுமா? கனியாகுமா? என்பதை காலம்தான் பொறுத்து பதில் சொல்லும் என தெரிவித்தார்.

மேலும், நடிகராக இருப்பது மட்டுமே அரசியலுக்கு தகுதியாக இருக்காது என சீமான் சொல்வது சரிதான் என தெரிவித்த வைரமுத்து, நடிகராக இருப்பதால் மட்டுமே அரசியலுக்கு வர முழு தகுதியும் வந்து விடாது எனவும் நடிகர் என்ற தகுதியுடன் சமூக அக்கறையும், ஆற்றலும், லட்சியமும் வேண்டும் என சீமான்  கருதுவது தவறு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அது ஒவ்வொரு தமிழனும் கருதக்கூடிய கருத்துதான் என்றார்.  தொடர்ந்து, தமிழ்நாட்டு ஆளுநர் இன்னும் மிக சரியாக தமிழ்நாடு அரசோடும் தமிழ் மக்களோடும் ஒத்துழைக்க வேண்டும் தமிழ் மக்களின் மனதை புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நினைக்கிறது எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.