தமிழ்நாடு

திடீா் வெள்ளப்பெருக்கு: குற்றாலத்தில் குளிக்க தடை!

Malaimurasu Seithigal TV

தொடர் கனமழையால், ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று முதல் 23-ம் தேதி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக  சென்னையில் கிண்டி, போரூா், முகலிவாக்கம், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வேளச்சோி, அண்ணாநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனா். 

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம்  தடை  விதித்துள்ளது. இதன் காரணமாக குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.