தமிழ்நாடு

அருவிகளில் குளிப்பதற்கு தடை...ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்!

Tamil Selvi Selvakumar

வெள்ளப் பெருக்கு காரணமாக மணிமுத்தாறு மற்றும் கும்பக்கரை அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில், மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று  கனமழை பெய்தது. இதன்காரணமாக அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் குளிக்க முடியாத ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர்.

இதே போல், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலை முதல் இரவு 12 மணி வரை கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு நீரவரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பார்வையிடவும் வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.