தமிழ்நாடு

"மகளிர் உரிமைத் தொகையை பிடிக்க உரிமை இல்லை" அமைச்சர் பெரியகருப்பன்!!

Malaimurasu Seithigal TV

மகளிர் உரிமைத் தொகையில் கை வைப்பதற்குயாருக்கும் உரிமை இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

கூட்டுறவுத்துறை அமைச்சர்  பெரியகருப்பன்  தலைமையில் கீழ்ப்பாக்கம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூடுதல் பதிவாளர்கள், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் ஆகியோர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட விவரம், கூட்டுறவுத்துறை அறிவிப்புகள் தொடர்பாக மோற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள், புதிய உறுப்பினர் சேர்க்கை, பயிர்கடன்கள் வழங்கிய விவரம், பயிர்க் கடன் வழங்குதல் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குதலில் முன்னேற்றம், கூட்டுறவுச் சங்கங்களில் வைப்புத் தொகை, உள்ளிட்ட நிர்வாகம் சார்ந்த முக்கிய விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டது. மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெறும் பணிகளை தொய்வின்றி, விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்.

அப்பொழுது பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் புதிய வங்கி கணக்குகள் கூட்டுறவு வங்கிகளுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாகவும், அதை விட கூடுதலாகவும் நமது கூட்டுறவு வங்கிகளின் சேவைகளை மக்களுக்கு வழங்கியிருப்பது  பாராட்டுதலுக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், கலைஞர் உரிமை தொகை பயனாளிகளுக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, நிதித்துறை அமைச்சர் மூலம் வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது உரிமைத்தொகை. இதிலே கை வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்ற கண்டிப்பான அறிக்கை இப்போது வெளிவந்திருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை" என்று அறிவித்துள்ளார்.