தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கும் மாடுபிடி வீரர்கள்..!

Malaimurasu Seithigal TV

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கிய நிலையில் வாடிவாசலில் இருந்து சீறிவரும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்பி வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்ற நிலையில் 320 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டில் சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கி வரும் நிலையில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

முதல் சுற்றில் 61 காளைகள் களம் இறக்கப்பட்டு முடிவுற்ற நிலையில் சுழற்சி அடிப்படையில் அடுத்த சுற்றில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 10 மாடுபிடி  வீரர்களுக்கு உடல் தகுதிப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு மாடு பிடிவீரர் மது அருந்தி வந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் விலங்கு நல வாரிய அதிகாரி காளைகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை நேரில் ஆய்வு செய்தார்.

காயமடையும் வீரர்கள், பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் 30 மருத்துவர்கள், 54 செவிலியர்கள் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் தயாராக உள்ளனர். இதேபோல், காளைகள் காயம்பட்டால் சிகிச்சையளிக்க  30 கால்நடை மருத்துவர்கள், 63 கால்நடை உதவி ஆய்வாளர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கும் வழியில் அவனியாபுரத்தில் 7 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.