தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்!

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கொடிமரத்தில் காலை 4.45 மணி முதல் 6.12.மணி வரை கொடியேற்றம் வெகுவிமர்சையாக  நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். 

கொடியேற்றத்தை தொடர்ந்து வரும் 23-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 26-ம் தேதி விழாவின் நிறைவு நாளன்று பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகளும், வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.