அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கே.பி முனுசாமி கேள்வி:
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் இன்று கூடியது. தொடர்ந்து வினாக்கள் விடைகள் நேரத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி நியாயவிலை கடைகளில் பொருள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.
சக்கரபாணியின் பதில் :
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். மேலும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிக்க: சட்டப்பேரவையில் உதயநிதியின் முதல் பேச்சு...உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பேசியது என்ன?
தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார். அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி, பொருள்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டார்.