தமிழ்நாடு

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி; காவல்துறையின் தோல்வி; இ.பி.எஸ். விமர்சனம்!

Tamil Selvi Selvakumar

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் காவல்துறையின் தோல்வியையே காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 28 மாத திமுக ஆட்சியில் காவல்துறை முற்றிலும் செயலிழந்து, கடும் தோல்வி அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் ஏதேதோ பேசி மக்களை குழப்பி திசை திருப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  அரசின் கைப்பாவையாக செயல்படும் காவல்துறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிகழ்வுகளை முன்னதாகவே அறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடு என்றும் சாடியுள்ளார். 

ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அடிபணிவதால் சமூக விரோதிகளின் செயல்களை உளவுத் துறை முன்கூட்டியே கண்காணித்து உண்மைத் தகவல்கள் அரசுக்கு வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மதுரை அதிமுக மாநாட்டிற்கும் உரிய பாதுகாப்பு வழங்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்ததாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். 

பல்லடம், கோவை உள்ளிட்ட கொலை வழக்குகளை குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் நடந்ததும் காவல்துறையின் தோல்வியைக் காட்டுவதாக தெரிவித்தார். 

மேலும், தமிழ்நாட்டில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.