தமிழ்நாடு

ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்... உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

Malaimurasu Seithigal TV

இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் உரிமம் பெற்ற நிறுவனங்கள் வடிவமைக்கும் பள்ளி வாகனங்களை மட்டும் பதிவு செய்ய கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழ்நாட்டில் தனியார் பள்ளி வாகனங்களின் மோசமான பராமரிப்பு காரணமாக விபத்துக்களை சந்தித்து,  அப்பாவி மாணவர்கள் உயிரிழக்க நேரிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.  மேலும், பள்ளி வாகனங்களில், மாணவர்களின் பாதுகாப்பை கருதி, தீ கண்டுபிடிப்பு கருவி, அலாரம், வேக கட்டுப்பாட்டு கருவி போன்றவற்றை பொருத்த வேண்டும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம்  விதிகளை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சங்கத்தின் உரிமம் பெற்ற வாகன வடிவமைப்பு நிறுவனங்கள் மட்டுமே விதிகளின்படி பள்ளி வாகனங்களை வடிவமைப்பதாகவும், தமிழ்நாட்டில் பல வாகன வடிவமைப்பு நிறுவனங்கள் இந்த உரிமத்தை பெற்றிருக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.  மாணவர்களின் பாதுகாப்பை கருதி, உரிமம் பெற்ற வாகன வடிவமைப்பு நிறுவனங்களில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இது சம்பந்தமாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.  தமிழ்நாடு அரசுத்தரப்பில், மத்திய சாலை போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.