மங்கள்யான் திட்ட இயக்குனராக பணியாற்றி பத்மஸ்ரீ விருது பெற்று நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி அருணன் சுப்பையா புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்த நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி அருணன் சுப்பையா இவ்விழாவிற்கு அழைக்கப்படாதது கேள்விக்குள்ளாகி உள்ளது.
விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. உயர் கல்வித்துறையின் சார்பில் "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி, சந்திரயான் -3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.
அவர்களுக்கு தலா, 25 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானியான சுப்பையா அருணனிற்கு இந்த அங்கீகாரம் கிடைக்காதது பேசு பொருளாகியுள்ளது. மங்கள்யான் திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். மேலும் மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணின் மருமகன் தான் சுப்பையா அருணன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட விஞ்ஞானிகள் அனைவரும் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் விண்வெளி ஆராய்ச்சிகளில் சாதனை படைத்தவர்கள். ஆனால், அருணன் சுப்பையா சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தகக்து. அவருக்கு உரிய அங்கீகாரம் தமிழக அரசால் வழங்கப்படாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் வட்டம், ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர் தான் விஞ்ஞானி சுப்பையா அருணன். இவரது தந்தை சுப்பையா, ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் அம்மாள் ஆவார். அருணன் திருக்குறுங்குடி மற்றும் பாளையங்கோட்டையில் பள்ளிப் படிப்பை பூர்த்தி செய்தார். பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து, 1984ம் ஆண்டு திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கினார். பின்பு பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் சேர்ந்து தனது பணிகளை தொடங்கினார்.
படிப்படியாக முன்னேற்றம் கண்ட சுப்பையா அருணன், செவ்வாய் கிரகத்தை ஆராயும் இஸ்ரோவின் மங்கள்யான் திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினார். மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்று, சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு அங்கீகாரம் பெற்று தந்தது. இவர் தொடர்பாக தமிழ்நாடு அரசின் 9ம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தான், "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பிலான தமிழ்நாடு அரசின் பாராட்டு விழாவில், சுப்பையா அருணனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது பேசுபொருளாகியுள்ளது. தமிழக அரசு இதுத் தொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.