செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சென்னையில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக்கூடாது என அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பருவ மழையை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அனைத்து பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் மாதத்தை பாலம் பராமரிக்கும் மாதமாகக் கொண்டு பாலங்கள், சிறுபாலங்கள் வடிகால்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக்கூடாது என கூறிய அவர், தோண்டப்பட்ட சாலைகளில் அக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்றும், வாகன சுரங்க பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப் பாதைகளில் நீர் தேங்குவதை தவிர்க்க மின்சார நீரேற்று பம்புகள், மின் அறுவை இயந்திரம், ஜெனரேட்டர் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து இயந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேபோல் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, கத்திபாரா முதல் கோயம்பேடு வரையிலான திருவள்ளூர் சாலை, கொளத்தூர் சாலை, சென்னை தினத்தந்தி அலுவலகம் முன்பாக நடைபெற்று வரும் பணிகளை அடுத்த 15 நாட்களில் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வருடம் 46 நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக 15 கோடி ரூபாய் மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஒப்பந்தம் கோரப்பட்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட அவர், மழை நீர் வடிகால்களில் மண், குப்பை போன்றவை செல்லாத வகையில் தடுப்புகள் விரைவாக அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதையும் படிக்க:பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல் கொடுத்த மத்திய அரசு...வெள்ளை மாளிகை கண்டனம்!