தமிழ்நாடு

அண்ணாவின் நிலைப்பாடே எங்கள் கருத்து...ஆளுநர் குறித்து டிடிவி அதிரடி பேச்சு!

Tamil Selvi Selvakumar

ஆளுநர் சனாதனத்தை பற்றி பேச தேவையில்லை; அவர் பேசுவதை அவரது வீட்டில் கூட கேட்கமாட்டார்கள் என்று ஆளுநர் குறித்து அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமமுகவின் வலைதளத்தை தொடங்கிய  டிடிவிதினகரன்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மேம்படுத்தப்பட்ட அமமுக-வின் வலைதளத்தை தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி:

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுகவின் வலைதளத்தை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். Ammk.com மூலம் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அண்ணாவின் நிலைப்பாடே எங்கள் கருத்து:

தொடர்ந்து பேசிய அவர், ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ, அதேபோன்று தான் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார். மேலும், ஆளுநர் சனாதனத்தை பற்றி பேச தேவையில்லை; அவர் பேசுவதை அவரது வீட்டில் கூட கேட்கமாட்டார்கள். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தாலே இப்படிதான் பேசுவார்களோ என்னவோ தெரியவில்லை என்று ஆளுநர் குறித்து டிடிவி கருத்து தெரிவித்தார்.

முன்னதாக, சமீபகாலமாகவே, ஆளுநர் சனாதனம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஆளுநர் அவருடைய வேலையை கூட சரிவர செய்வதில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனிடையே மாநில அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டி குடியரசுத்தலைவரிடம் கடிதம் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அண்ணாவின் நிலைப்பாடே எங்கள் கருத்து என்று கூறி ஆளுநர் தேவையில்லை என்பதை தெரிவித்துள்ளார்.