மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொட்டும் மழையில் நனைந்து கொண்டு பேசிய போது கூறியதாவது;
மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். 1947 இல் திருவாவடுதுறை ஆதீனம் அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கிய செங்கோலை நேரு கைத்தடி என்ற பெயரில் பயண்படுத்தி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட செங்கோலை தற்போது புதிய பாராளுமன்றத்தில் அதே செங்கோலை திருவாசகம் கோளறு பதிகம் தேவாரத்தோடு பாரத பிரதமர் பாராளுமன்றத்தில் நிறுவி மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார், என கூறியுள்ளார்.
மேலும், டெல்டா காரன் என்று கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷன் பெறப்படுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது திமுக அரசு வழங்கவில்லை.
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடு கட்டி தருவதாக கூறிய தமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டி தரவில்லை, எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 2009 ஆம் ஆண்டு ஈழ தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர் தொடுத்த போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்றது காங்கிரஸ் கட்சி. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத் தமிழருடன் தோளோடு தோள் நின்று, இன்று அவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நமது பிரதமர் நரேந்திர மோடி, என பேசியுள்ளார்.
மேலும், பாட்னாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக ஓடிச் சென்றவர் முக.ஸ்டாலின். பின்வாசல் வழியாக செல்வதும், ரயிலில் ஏறி வருவதும் அவருக்கு புதிது அல்ல, என சாடியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை முதல் ஆளாகச் சென்று சந்தித்தது தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் தான். அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய திமுக ஆட்சியை அகற்றுவதும் முக்கியமான கடமை என பரபரப்பாக பேசியுள்ளார்.
இதையும் படிக்க: ”இராஜ்பவனின் தோட்டக்காரரும் தமிழ்நாட்டின் ஆளுநரும் ஒன்று” சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்!