தமிழ்நாடு

"சனாதனத்தை வேரறுக்க, தமிழ் நாடு சின்னத்திலுள்ள கோபுரத்தை மாற்றுவார்களா?" அண்ணாமலை!!

Malaimurasu Seithigal TV

2024 மற்றும்  2026 தேர்தலை சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா என அமைச்சர் உதயநிதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டாம் கட்ட நடைபயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை , கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற உரியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறியடித்து மகிழ்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சனாதனத்தை வேர் அறுக்க  வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் சின்னத்தை மாற்ற வேண்டும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

சனாதன தர்மம் என்ன என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலுக்கு வந்து 30 பிரசுரங்களை படித்ததாகவும், அதுவும் ஒரு வகையான சனாதான தர்மம் தான் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள் தான் என்று 1949-ஆம் ஆண்டு முதல் திமுக மற்றும் தி.க-வினர்  பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது தான் சனாதன தர்மம் என்று தெரிவித்துள்ளார்.  

மேலும் 2024 மற்றும்  2026 தேர்தலில் சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா எனவும் திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்தால், பாஜக  சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.