தமிழ்நாடு

"2024 தேர்தல்: திராவிட மாடலா? தேசிய மாடலா? என்பதற்கான தோ்தல் " அண்ணாமலை பேச்சு!!

Malaimurasu Seithigal TV

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் படிப்புக்கும்- குடிக்குமான தேர்தல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அப்பகுதி மக்களுடன் உரையாடியுள்ளார். அப்பொழுது அவர் பேசியதாவது," சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க சீன பட்டாசுகளுக்கு தடை ஏற்படுத்தியது மோடி அரசு. அதேபோன்று தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டருக்கு தடை செய்தது ஒன்றிய அரசு. பட்டாசு தொழிலுக்கு உண்டான உச்ச நீதிமன்ற வழக்கில் விரைவாக தடையில்லாத தீபாவளி ஆண்டாக நிரந்தரமான தீர்வு காணப்படும். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இல்லாவிடில், சிவகாசி பட்டாசு தொழில் வளர்ந்து இருக்காது. சீன பட்டாசு இறக்குமதியாகி, உச்ச நீதிமன்றத்தில் சிவகாசி பட்டாசுக்கு தடை வந்து இருக்கும்'' எனக் கூறியுள்ளார்.

மேலும், "தமிழகத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். தற்போது ஸ்டிக்கர் அரசாக திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது. 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 400 உறுப்பினர்களுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழையும், தமிழனின் பெருமையையும் ஐநா சபையில் இருந்து எல்லா இடங்களிலும் பறைசாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி. சோழர்கால செங்கோலை பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைத்துப் பெருமைப்படுத்தவர் நரேந்திர மோடி" என்று பெருமையாக பேசியுள்ளார்.

மேலும், இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், 40 சதவீத மதுபான ஆலைகளை திமுகவினரே நடத்துகின்றனர் என்றும் டாஸ்மார்க் மது பிரியர்களுக்கு நடக்கவில்லை, பணப் பிரியர்களுக்காக நடக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் படிப்புக்கும்- குடிக்குமான தேர்தல். திராவிட மாடல் ஆட்சியா? தேசிய மடல் ஆட்சியா? சாமானிய அரசியலா? வாரிசு அரசியலா? என்பதற்கான தேர்தல்' என்றும் பேசியுள்ளார்.