சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பெண் காவலர்களுக்கான விடுதி அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் மகளிரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்...!
மேலும் இவ்வசதி பெண் காவலர்கள் சென்னை மாநகருக்கு பணியிட மாறுதல் பெற்று வரும்போதெல்லாம், அவர்களுக்கு அரசு குடியிருப்புகள் கிடைக்கும் வரை அல்லது சொந்தமாக வாடகைக்கு தங்கும் விடுதியை ஏற்பாடு செய்யும் வரை தங்கும் இடமாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி அமைத்திட 9 கோடியே 73 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.